×

ரூ20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முன்னாள் கமிஷனருக்கு 3 ஆண்டுகள் சிறை: வேலூர் கோர்ட் உத்தரவு

வேலூர்: வேலூரில் ரூ20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி முன்னாள் கமிஷனருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி கமிஷனராக 2017ம் ஆண்டு பணியாற்றி வந்தவர் குமார். அப்போது வேலூர் வேலப்பாடி பகுதியை சேர்ந்த பாலாஜி வேலூர் மாநகராட்சியில் கொசு ஒழிப்புக்காக மருந்து அடிக்கும் பணிக்கான டெண்டரை எடுத்திருந்தார். இதற்காக ரூ10 லட்சத்து 23 ஆயிரத்துக்கான காசோலையை மாநகராட்சி கமிஷனராக இருந்த குமாரிடம் சென்று கேட்டார். அப்போது கமிஷனர் தனக்கு கமிஷனாக ரூ22 ஆயிரம் தர வேண்டும் என கேட்டார்.

அதற்கு பாலாஜி ரூ20 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டார். பின்னர் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்பேரில் பாலாஜி ரூ20 ஆயிரம் பணத்தை கமிஷனர் குமாரிடம் வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜி.ராதாகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அதில் குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தண்டனை பெற்ற முன்னாள் கமிஷனர் குமார் சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சியில் துணை கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ரூ20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முன்னாள் கமிஷனருக்கு 3 ஆண்டுகள் சிறை: வேலூர் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vellore court ,Vellore ,Kumar ,Vellore Corporation ,Vellapadi ,Dinakaran ,
× RELATED ேவன் மீது ரயில் மோதி 9 விஏஓக்கள் பலியான...